இறையருளில் மாப்பாணி கந்தசாமி.

By Nagamuthu Mahesan on Dec. 23, 2020

Card image cap

இறையருளில் மாப்பாணி கந்தசாமி.
எமது வாழ்நாளில் பல தரப்பட்ட மனிதர்களுடன் பயணித்திருப்போம் . எமது உள்ளூரில்
பல மனிதர்களின் நோக்கம் அல்லது செயற்பாடுகள் சமூக முன்னேற்றம் சார்ந்ததாகவே இருந்ததை பலரின் செயற்படுகளின் மூலம் கண்டுள்ளோம்.இந்த வகையில் நான் அவதானித்த கற்றுணர்ந்த மாப்பாணியாரைப் பற்றி இங்கு எழுத விளைகின்றேன் .

புலம் பெயர்ந்த இங்கே கை தூக்கி விடுபவர்களை விட தள்ளிக் கீழே விழ வைப்பவர்களே அதிகம்.இதில் இருந்து சற்று மாறுபட்டவராக எமது உள்ளூர்காரர் மாப்பாணியார் இருந்துள்ளார்.எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து சமூக சேவைகளினூடாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதைய எமது உள்ளூர் வீதிகள் கிரவல் ஒழுங்கையாக,ஒற்றையடி மண் பாதையாக கை ஒழுங்கையாக பற்றையும் பூடுகளுமாய் இருக்கும்.மாரி காலத்தில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் கிராம வாலிபர்களின் முயற்சியால் உள்ளூர்காரர் அனைவரும் இணைந்து சிரமதான முறையில் ஈடுபடுவோம். அப்போதெல்லாம் மாப்பாணியார் துப்பரவில் ஈடுபடும் எமக்கு உணவு தேநீர்,வடை,அவல் என்று சிற்றுண்டிகளை அளித்து ஊக்கமளிப்பார் .
இவை மட்டுமல்ல பல வாலிபர்களுக்கு சுய வேலை வாய்ப்புகளுக்கு தன்னாலான பல உதவிகளை செய்து கொடுத்துள்ளார். அன்றைய கால கட்டத்தில் எமது விவசாய விளை பொருட்களை இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக மொத்த வியாபாரிகளுக்கு தகுந்த விலைக்கு பொருட்களை விற்று தந்தார் மேலும் விளை பொருட்களை தகுந்த பெறுமதிக்கு வேண்டி அவைகளை நியாய விலைக்கு விற்பனை செய்து புதிய முயற்சிகளை உருவாக்கினார். மேலும் தனது விளை நிலங்களில் கரணைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சாமி, குரக்கன், சணல், ,தக்காளி, வாழை போன்ற பயிர்களை செய்து இப்படியும் லாபம் பெறமுடியும் என்பதனை நிரூபித்தவர் மாப்பணியார் ஆவர் .

சூழ் நிலைக்குஏற்ப மாட்டுப்பண்ணைகளை உருவாக்கி பால், நெய், எரு போன்ற புதிய முயற்சிகளைத் தொடர்ந்தார்.

உள்ளூரில் நடைபெறும் மானம்பூ திருவிழாவில் புவனேஸ்வரி அம்பாள் கிராம வலம் வரும் போது மாப்பாணியாரின் வீட்டுக்கு முன்னால் பெரு விழாவே கோலம் காணும். அனைவருக்கும் மன நிறைவுடன் பல வகையான சிற்றுண்டிகளை மன மகிழ்ந்து இறை அன்புடன் உபசரிக்கும் பாங்கினை நான் பார்த்திருக்கிறேன் .

பின்னாளில் அம்பாளின் அதி பக்தியினால் அவ் ஆலயத்தில் வெகு நீண்ட காலமாக பொருளாளராக இருந்து ஆலய வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.
அக் காலா கட்டத்தில் தன் சுய முயற்சியால் மாலை கட்டும் நுணுக்கங்களைக் கற்று அதிலும் தேர்ச்சியாளர் ஆனார். இவரின் இறையருளை நானும் மெய் மறந்து பார்த்திருக்கின்றேன். இவரின் மகத்தான சேவைகளை எமது கிராமம் பெற்ற காலத்தில் நானும் அவர் காலத்தில் வாழ்ந்தேன் என்ற பெருமையோடு எழுத விழைகின்றேன் . இவர் போன்று பலர் எமது கிராமத்தில் தொடர்வோம் என்று கூறி நிறைவு செய்கின்றேன்.
நன்றி.
உங்களில் ஒருவன்,
மகேசன்.