பணக்காரராக வாழுங்கள், ஆனால் பணக்காரர் மாதிரி பாசாங்கு செய்யாதீர்கள்

By நா. மகேசன் கனடா. on Sept. 8, 2023

Card image cap

பணக்காரராக வாழுங்கள், ஆனால் பணக்காரர் மாதிரி பாசாங்கு செய்யாதீர்கள்

உலகத்திலேயே வாழ்வதற்கு மிகவும் அபாயகரமான விடயம் எது என்றால் பணக்காரர் போல் பாசாங்கு செய்வதும், வரவுக்கு மிஞ்சி செலவு செய்வதும்தான். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் கோடானுகோடி மக்கள் வறுமைப்பட்டுப் போவதற்கு இது ஒரு முக்கியமான காரணமாக அமைகின்றது.
இன்றைய சமுதாயத்தில் வறட்டுக் கெளரவமே தலைவிரித்து ஆடுகின்றது. பணக்காரர்களிடம் மட்டும் இல்லாது சாதாரண பாமர மக்களிடமும் இது பரவிவிட்டது. இவர்கள் தங்களை பணக்காரர்களாக பாசாங்கு செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். வருமானம் வருமுன்பே செலவு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்கள் மற்றவர்களின் கண் பார்வைக்காக தங்களின் கண்களால் பார்க்க மறந்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கடன் என்ற பாதாளத்திற்கு காலடி எடுத்துவைக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறு மற்றவர்களின் மதிப்பைப் பெறவிரும்பி தங்களின் மதிப்பையே பலி கொடுத்து விடுகின்றார்கள். இவர்கள் பணக்காரர் போல் நடிக்க ஆரம்பித்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
நாகரீகம் நாகரீகம் என்று சொல்லி பலர் தங்கள் பணத்தை காலி செய்துவிடுகிறார்கள். ஒருவனுடைய உடல் அழகைவிட அவன் உள அழகே மேலானது உலகத்திலே உள்ள பெரும் பாலான மக்கள் தங்களின் குறைந்த வருமானத்தை அதிகரிக்காமல் அதற்குப் பதிலாக அதை மறைக்கவே முயற்சிக்கிறார்கள். இதற்காக கடன் பட்டு கடன் என்ற முதலையின் வாயில் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை. மற்றவர்களின் மூளை மூலமாக சிந்திக்கிறார்கள். இவர்கள் முன்னால் பார்த்துக் கொண்டு பின்புறமாக நடப்பவர்கள். எனவே இவர்கள் தங்களைத் தாங்களே பாதாளத்திற்குக் கொண்டு செல்கின்றார்கள். இல்லாததை இருப்பதுபோல் பாசாங்கு செய்வதுதான் இக்காலத்தில் முதன்மை வகிக்கின்றது. இப்படி நடிக்கப்போய் தங்களின் வாழ்க்கையை போலியான வாழ்க்கையாக மாற்றி விடுகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் விரும்புவது தான் பிறரால் மதிக்கப் படவேண்டும் என்று, அது வரவேற்கத்தக்கதுதான். அதற்காக போலியாக நடிக்க வெளிக்கிட்டால் அது இருந்த மதிப்பையும் எடுத்துவிடும். பணக்காரர்கள் போன்று பாசாங்கு செய்வதற்காக பலர் வீண் செலவு செய்து பணத்தை அழிக்கின்றார்கள். இதுவே நீர்க்குமிழி போல் அழிந்து விடுகின்றது. இதனால் இவர்கள் எல்லாவற்றையும் பலிகொடுத்து விடுகிறார்கள்.
அமைதி. 2. கெளரவம். 3. உண்மை. 4. ஒழுக்கம். 5. மகிழ்ச்சி.
இவை எல்லாம் இவர்களை விட்டு பீரங்கி வேகத்தில் ஓடி விடுகின்றது. இதனால் நிம்மதி இழந்துதுன்பம் என்ற நிலைக்கு கொண்டுபோய் விடுகின்றது. இந்தப் பொய் வேசத்தினால் உலகில் எத்தனை தற்கொலைகள் நடக்கின்றன.தங்கள் பொய் மதிப்பைக் காட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை இழக்கின்றார்கள்.

இவ்வாறு ஒருவன் கடன் பட்டால் அவன் நிலைமை என்ன ?
தன்னுடைய சுதந்திரத்தை பிறரிடம் பறி கொடுத்து விடுகின்றனர்.
பிறரை தன்மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விடுகின்றனர்.
கடன் வாங்கியர் முன்னால் நிற்க முடியாதவனாகி விடுகின்றான்.
கடன் வாங்கியவனைக் கண்டால் அவன் மனம் கலங்குகின்றது.
கடன் வாங்கியவனைக் கண்டால் இல்லாத பொய்களைச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.
இதோதருகிறேன், அதோ தருகிறேன் என்று ஏமாற்று மந்திரக்கோலை எடுத்துக் கொள்கிறான்.
பொய் என்ற குதிரைமீது பொய்யும் புரட்டும் ஏறி சவாரி செய்ய ஆரம்பித்து விடுகின்றது.
பொய் மதிப்பிற்காக கடன் படுவதைப்போல் முட்டாள்தனம் எதுவும் இல்லை. அதை விட்டுவிடுவதே அறிவுடமை. வருமானத்திற்கு மேல் செலவு செய்பவன் சுத்து மாத்துக்காரனாகி விடுகின்றான். இவ்வாறு கடன்பட்டுத் தான் பல இளைஞர்களையும், வணிகர்களையும் சிறைச்சாலைக்குள் அனுமதித்து விடுகின்றது. இப்போதைய இளைஞர்கள் கடன் படுவதற்கு சிறிதேனும் வெட்கப்படுவதை நான் காணவில்லை. இது ஒரு தொற்றுநோய்போல் பரவி விடுகின்றது.
நான் என் கடன்களைத் திரும்பச் செலுத்துவதில் பெருமை அடைகின்றேன்.என் துன்பச் சுமைகளையும், அடிமைத்தனத்தையும் தூக்கி எறிகின்றேன். ஆயகலைகள் அறுபத்தி நான்கு,நான் சொல்வேன் அறுபத்தைந்து என்று.65 ஆவது கலை எதுவென்றால் பணத்தை நிர்வகிக்கும் கலை, அதாவதுகடன் வாங்க அஞ்சுதல் என்பதுதான்.
என்னிடம் ஒரு நண்பர் கேட்டார் எனக்குக் கார் வாங்குவதற்கு விருப்பமாக இருக்கின்றது ஆனால் கடன்பட விருப்பம் இல்லை என்று. நான் சொவேன் இதற்கு இரண்டு வழிதான் இருக்கின்றது என்று.
கார் வாங்குவதைத் தவிர்த்துக் கொள்வது.
பணம் வரும்போது வாங்குவது.
என் நண்பன் சொன்னான் தான் நிம்மதி என்ற மாடமாளிகையில் வாழ்கிறேன் என்று, திடகாத்திரமான அறிவுரை என்று என்னை பாராட்டினான்.
யார் ஊதாரித்தனம் செய்கின்றானோ அவன் எப்போதும் கடன் வாங்கிக் கொண்டேதான் இருப்பான். கடன் வாங்குபவன் துன்பப்படுவதைத்தவிர வேறுவழி இல்லை. கடன் தான் மிகக் கொடிய மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே கடன் படாமல் நீ வாழ்ந்தால் உனது வாழ்க்கையே உனக்கு நன்றி கூறும். வாழ்வைத் தொடங்கும் ஒவ்வொருவரும் கடன்படாது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறி இன்னுமொரு மடலில் உங்களைச் சந்திக்கின்றேன்.

( கடன்படுவதற்கு கடல் அட்டைபோல் போ, கடனை அடைப்பதற்குக் குதிரைபோல் பாய்ந்து போ )
கடன் பட்டார் நெஞசம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் – கம்ப இராமயணம்.

நா. மகேசன்
கனடா.