கண்ணீர் அஞ்சலி—அமரர் தம்பிமுத்து கதிரமலை

By நாராயணபிள்ளை ஈஸ்வரன் on Dec. 28, 2020

Card image cap

விழி நீர் சொரிய
விம்மலுடன் என்
கண்ணீர் பூக்களை
காணிக்கையாக்குகின்றேன்
உறவால் நாம் இணைந்திருந்தாலும்
உள்ளத்தால்
எமை இணைத்தவள்
அன்னை புவனேஸ்வரியே
அதனால் தான் அவசரமாய்
அன்னை உனை அழைத்தாளோ!
ஆண்டுக்கு ஒரு முறை
அன்னையின் திருவிழா
அது பெருவிழா
வேட்டைத் திருவிழா
அது வேடிக்கைத் திருவிழா
ஆடிடும் இளைஞர் கூட்டம்
சேர்ந்தே ஆடிடுவாயே
இனி எப்போது காண்போம்
அந்த இனிய காட்சியை !
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
அழைத்திடும் தொலைபேசி
அதிரும் குரல் அது
அன்பின் அடையாளம்
ஒருநாள் தவறின்
பதற்றமாய் வரும் அழைப்பு
என்ன சுகவீனமா என
உரிமையோடும் உறவோடும்
இனி யாரையா எனை கேட்பார் !

எல்லா விடையத்தைம்
என்னோடு பகிர்ந்து கொள்வாயே
இறுதிப் பயணத்தை மட்டும்
சொல்ல மறந்தாயோ
வருவேன் என்றுதானே
சொல்லி விட்டுப் போனாய்
வருவாய் என்றுதானே
நானும் காத்திருந்தேன்
எத்தனை பணிகள்
எமக்காய் அங்கே காத்திருக்க
எல்லாவற்றையும் செய்து
முடிப்போம் என்றாயே
இனி எப்படி செய்வது
ஏதுமறியாது தவிக்கின்றேன்
எழுந்து வரமாட்டாயா
என ஏங்குகின்றேன்
வரமாட்டாய் என
தெரிந்தும் என்மனம்
ஏங்குகின்றதே
என் செய்வேன்!
விண்ணுலகு ஏகிய வேந்தனே
உன் ஆன்மா நித்திய நிலைபெற
வேண்டி நின்றேன்
வேறேதும் வேண்டேன்!
நா.இ.ஈசுவரன்.
கனடா
27-12-2020.