கட் டுப்பாடா இருங்கள்.ஆனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்காதீர்கள்

By நா. மகேசன் on Oct. 13, 2024

Card image cap

கட்டுப்பாடாக இருங்கள், ஆனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்காதீர்கள்

பல பேர்களின் ஆதரவுடன், அவர்களின் கருத்து உள்வாங்கலுடன் நான் இதை எழுதி உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். என்னை யார் கீழே தள்ள நினைக்கின்றார்களோ, அவர்கள்தான் என்னை உயர்த்தி விடுகிறார்கள். என் கட்டுப்பாடு இல்லாத செயற்பாடுகள், நான் இதை எனக்கு உதாரணமாகச் சொல்கின்றன.. இது உங்கள் எல்லோருக்கும் பொருந்தும்.
நான் விரும்பிய காரியத்தைச் செய்வதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று தவறான எண்ணம் எல்லோருக்கும் இருக்கின்றது. ஒருவர் ஆசைப்படுவது எல்லாம் எப்பொழுதும் அடைய முடிவதில்ல. பல நேரங்களில் மதிப்புக்களின் உயர்வுகளையும், கட்டுப்பாட்டின் நன்மைகளையும் மற்றவர்கள் புரிந்து கொள்வது அவ்வளவு இலகுவானது இல்லை. மாற்று வழிகளில் செய்தால் இது சுலபமாகவும், செளகரியமாகவும் இருக்கலாம் என்று கூட தோன்றலாம். சிலநேரங்களில் கட்டுப்பாடு இல்லாமல் இயங்குவது எம்மை எப்படி கீழே தள்ளும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கின்றேன். இரு சவாரி மாட்டுக் கன்றுகளை கயிற்றால் கட்டி விற்பனை செய்பவர் கொடுக்கிறார், அதை வாங்கியவர் கொண்டுவரும் போது அவைகள் வேகமாக நடந்து வருகின்றன. அவர் கயிற்றின் நீளத்தை மீண்டும் விட்டுக் கொடுக்கின்றார். அவை இன்னும் வேகமாக நடக்கின்றன. அதன் பிறகு கயிறு முடிந்து விடுகின்றது. இவர் யோசித்தார் இந்த மாடுகளின் வேகத்தைக் கட்டுப் படுத்துவது இந்தக் கயிறுதானே, இந்தக் கயிற்றை விட்டு விட்டால் மாடுகள் இன்னும் வேகத்தில் செல்லும் என்று கயிற்றை விட்டு விட்டார். மாடுகள் ஓடிச் சென்று விட்டன. இப்போது என்ன நடந்தது, மாடுகள் தொலைந்து விட்டன. மாடுகளை இவருக்குச் சொந்தமாக கட்டுப்படுத்தி வைத்திருந்தது கயிறு, கயிற்றை விட்டு விட்டார். என்ன நடந்தது கட்டுப்பட்டை இழந்தார், மாடுகளையும் இழந்தார். இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்ன. கட்டுப்பாடாக நாம் சமுதாயத்திலிருந்தால் மதிப்பையும் கெளரவத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
நான் சுதந்திரமாக வாழ விரும்புகிறேன் என்று சட்டதிட்டங்களை மதிக்காது அவைகளைக் கடைப்பிடிக்காமல் வாழ்ந்தால் என்ன நடக்கும், நடுவீதியில் நடந்து சென்றால் என்ன நடக்கும் எனக்கு விபத்து நடக்கும். கட்டுப்பாடு இல்லாமல் அளவிற்கு அதிகமாக மது அருந்தினால் என்ன நடக்கும். மறுநாள் தலைவலியால் வருந்தவேண்டி இருக்கும். வீதி ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காமல் நாம் வாகனத்தை ஓட்டினால் விபத்திற்கு உள்ளாகி விட வேண்டிவரும். கட்டுப்பாடு இல்லாமல் உணவு உண்டால் அதிக நோய்களை எதிர் கொள்ள வேண்டிவரும். இதனால்தான் நாங்கள் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றேன்.
ஆனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்காதீர்கள் என்று நான் சொல்கின்றேன் இதன் அர்த்தம் என்ன?. இதுதான், உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உங்களுடன் பேசும்பொழுது, இந்த பூமியிலேயே நீங்கள்தான் மிகச் சிறப்பான மனிதர். நீங்கள் மிகச் சிறப்பாக தொண்டுகள் செய்கின்றீர்கள். உங்களை நான் எனக்குத் தெரிந்தவர் என்று சொல்லும் போது நான் பெருமைப்படுகின்றேன் என்று. இந்த வார்த்தை என்னை என்னவாக நினைக்க வைக்கும், என்னப் பெரிய மனிதர் என்று நினைக்க வைக்கும். அதே மனிதர் சில மாதங்களுக்குப் பின் சில, பல காரணங்களால், கோபத்தினால் என்னை நீதான் இந்த பூமியிலே மிகவும் ஏமாற்றுக்காரன் என்று சொன்னால், இது என்ன என்னவாக நினைக்க வைக்கும். எனவே முதல் அவர் என்ன நல்லவர் என்று சொல்கிறார், சில மாதங்களின் பின் என்னை ஏமாற்றுக்காரன் என்று சொன்னவுடன் நான் என்ன மோசமானவனாக உணர்கிறேன். இதில் என் வாழ்வை யார் கட்டுப்படுத்துவது, உண்மையாக அவர்தான். இது எனக்கு வேண்டுமா, இல்லவே இல்லை!. இது வெளிப்புறமாக எங்கள்மீது கட்டுப்பாடு உந்தப்படுகின்றது. இது மற்றவர்கள் என்னைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றார்கள். ஆனால் உண்மையிலேயே நான் நல்ல மனிதன் தான். எனது கட்டுப்பாட்டில் இருக்கும் போது. ஆனால் மற்ற்வர்களின் கட்டுப்பாட்டிற்குள் உந்தப்படும்போது நான் மற்றவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வாழ முற்படுகின்றேன். இதைத் தவிர்த்து விடுங்கள். நான் கோபப்படுகின்றேன் என்றால் எனது கட்டுப்பாட்டின் மையம் வெளியே இருக்கின்றது. ஆனால் நான் கோபமாக இருக்கிறேன் என்றால் எனது கட்டுப்பாட்டின் மையம் உள்புறமாக இருக்கின்றது என்று அர்த்தம்.

நா. மகேசன்
கனடா.