பின்னடைதல் வர காரணம் என்ன?

By நா. மகேசன் on April 13, 2025

Card image cap

பின்னடைதல் வர காரணம் என்ன? என்ன காரணத்தால் பின்னடைதல் வருகின்றது.
ஒவ்வொரு மனிதனுக்கும் முன்னேற்றம் இன்றியமையானது. நாம் ஒவ்வொருவரும் பல மாறுபட்டதுறைகளில் முன்னேறி இருக்கின்றோம். நாம் அனைவருக்கும் பொதுவாக இருந்து துணைபுரிவது முன்னேற்றத்திற்கு அறிகுறி. வேகத்துடன் கச்சிதமாக முயன்று சுய முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரும் முதலில் திட்டப்படுத்திக் கொள்ள வேண்டும். முன்னேற்றம் என்பது சிறிய வசதிகளைக் கொண்டு அதிகபட்ச வெற்றிகளைக் குவிப்பதாகும். ஒரு காரியத்தை நல்ல முறையிலும் செய்யலாம், தவறான முறையிலும் செய்யலாம். ஆனால் விளைவுகள் மாறுபடும்.
ஒவ்வொரு மனிதனும் தன் ஒத்துழைப்பையும், தன் பங்களிப்புக்களையும் செய்யாவிட்டால் நாம் நடைமுறை வாழ்க்கையில் நாகரீகம் என்பதைப் பார்க்க முடியாது. நமது மூதாதையைர் விட்டுச் சென்ற அனுபவ அறிவுகளையும், அவர்களால் செய்யப்பட்ட பொதுப் பணிகளையும் நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் செய்த பொதுப் பணிகளை நாம் பேணிப் பாதுகாக்காமல் விட்டால், அவைகளை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டி வரும். இது வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்து விடும், ஒரு பேரறிஞர் சொல்கிறார் “ மங்கிப் போவதை விட தேய்ந்து போவது நல்லது அன்று .சோம்பேறித்தனமும், அக்கறையின்மையும், திட்டமிடல் இல்லாமையும்தான் பின்னடைதலுக்கு முக்கியமான காரணியாகும்
ஒரு பொதுப் பணியில் வேலை செய்பவன் அவனுக்கு மனோதத்துவரீதியாகவும், சமூகரீதியாகவும் பாராட்டைக் கொடுத்தால் அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இல்லையேல் அது பின்னடைவுக்கு அத்திபாரமாக அமையும். மனிதன் ஒரு சமூகப் பிராணி அவனால் தனித்து வாழ முடியாது. இதனால் எல்லா மனிதரும் சமூக சேவை செய்ய கடப்பாடுடையவர்கள் ஆவர். எந்தளவு நாங்கள் சமூகத்தில் இருந்து பெறுகின்றோமோ அந்த அளவு நாங்கள் கொடுக்க வேண்டும். அப்படி அவன் தன் பங்கைச் செய்யாவிட்டால் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுவான். பொதுப்பணி என்பது சமூகத்திற்கு மட்டுமன்றி பொருளாதரத் தேவைகளையும் பூர்த்தி செய்யும், இது சமுதாயத்தின் மகிழ்ச்சிக்கு திறவுகோல் ஆகும்.
முன்னேற்றம் பெறுவதற்கு மூன்று முறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
நல்ல செயல் திட்டங்களை சிந்திப்பவராகவும், அதை நல்ல முறையில் நிறைவேற்றுபவராகவும் இருங்கள்
உங்கள் வேலையில் அல்லது தொழிலில் உ7ண்மையிலேயே ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் ஆர்வம் இருப்பதுபோல் காட்டிக் கொள்ளுங்கள்.
எந்தவொரு வேலையுமோ அல்லது எந்த ஒரு பொதுப்பணியோ ஆரம்பத்தில் கவர்ச்சியற்று அல்லது தடைப்பட்டு இருக்கும். ஆனால் அதனுடன் நேர்மை, நியாயம், நீதி என்பவற்றைச் சேர்த்துவிட்டால் கவர்ச்சியாக எல்லோரையும் ஈர்க்கும். ஒரு அசிங்கமான பொருளுக்கு பலமான ஒளியைப் பாய்ச்சினால் அது அதிக கவர்ச்சியைத் தருவது போல. எந்த பணிகளிலும் கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு( செலவுகளைக் கட்டுப்படுத்தல் ) போன்றவற்றைக் கடைப்பிடித்தால் அந்தச் செயல் எல்லோராலும் பாராட்டப்படும்.அது அபரிதமான முன்னேற்றமாக அமையும். இல்லையேல் அதற்கு எதிர்மறையான எதிர்ப்புக்களும்,பின்னடைவுகளும்தான் மிஞ்சும்.
ஒரு செயலைச் சாபமாக மதிப்பவர்கள் ஆர்வம் அற்ற வகுப்பினரைச் சேர்ந்தவர்கள். பாராட்டுதல்களையும், பதவி உயர்வையும், அதிக பணத்தையும், எதிர்பார்த்துக் கொண்டே வேலை செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் தேர்ந்த அறிவு பெறாதவர்கள். ஏன் நாம் செய்யும் செயலில் குற்றம் குறை கூறுபவர்கள் தாம் நம்மைச் சுற்றி இருக்கிறார்களே அன்றி, பாராட்டுபவர்கள் வெகு சிலரே! சிலருக்குப் பாரட்டுதல் என்பது மலைபோல் குவிவதைப் பார்க்கலாம். ஆனால் பாராட்டுக்கும் பணத்திற்கும் பணிகளை நிபந்தனையாகக் கொண்டால் இறுதியில் எதிர்ப்புக்களும் கவலையுமே நம்மை வந்து சேரும்.

நா. மகேசன்
கனடா..