அனைத்து பழைய மாணவர்களுக்கு மற்றும் நலன் விரும்பிகளுக்கும்

By J. S. R on Nov. 11, 2025

Card image cap

*அனைத்து பழைய மாணவர்கள் மற்றும் நலம்பிரும்பிகளுக்கு!*

நூறு ஆண்டுகள் கல்வி பாரம்பரியம் கொண்ட எமது கல்வித் தாய், வருகின்ற 2026 ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், கல்வித் தாயின் பிள்ளைகளாகிய நாம் பெருமையுடன் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றோம்.

இவ்விழா நிகழ்வுகளில் பங்கேற்க வரும் விருந்தினர்களை பாரம்பரிய முறையில் வரவேற்பதற்காக, தமிழர் பண்பாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் “இன்னியம்” இசை நடன அணியை உருவாக்கும் அவா கல்வித் தாய் சமூகத்தினருக்கும் நூற்றாண்டு விழா செயற்குழுவிற்கும் உள்ளது.

இன்னியம் என்பது தமிழர் பாரம்பரிய கலைகளையும், இசை – நடன நயத்தையும் ஒருங்கிணைக்கும் ஓர் வரவேற்பு அணி ஆகும்.
இந்த அணியில் கொடி, ஆலவட்டம், கொம்பு, பெரும்பறை, சிறுபறை, தம்பட்டை, மேளம், உடுக்கு, மத்தளம், நாதசுரம், புல்லாங்குழல், சிறுதாளம், பெரும்தாளம், மிருதங்கம், சங்கு, எக்காளம், சிலம்பு போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் ஒலிக்க, தமிழர் கலாச்சார உடையணிந்த மாணவர்கள் இனிய இசை அமைத்து நடனமாடி விருந்தினர்களை வரவேற்பார்கள்.

இந்த “இன்னியம்” இசை நடன அணியானது தற்சமயம் உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், எமது கல்வித் தாய்க்கும் இவ் அணியினை உருவாக்குவதற்கான உங்களது ஆதரவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னியம் இசை நடன அணிக்கான அடிப்படை இசைக்கருவிகளையும், தமிழர் பாரம்பரிய உடைகளையும் அமைப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.530,000 தேவைப்படுகிறது.
வாத்தியக்கருவிகளை மேம்படுத்தும் பட்சத்தில் இன்னும் சிறப்பான அணியாக உருவாகும் வாய்ப்பும் உண்டு.

எனவே, எமது கல்வித் தாயின் நூற்றாண்டு விழாவை தமிழர் கலாச்சாரத்தின் பெருமையுடன் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக, “இன்னியம்” இசை நடன அணியின் உருவாக்கத்திற்கான உங்களது ஆதரவினை அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி.

*நூற்றாண்டு விழா விசேட செயற்குழு*