எங்கள் எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுவது எப்படி?

By நா . மகேஸ்வரன் கனடா on Jan. 20, 2021

Card image cap

எங்கள் எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுவது எப்படி?

காலத்தால் தொன்மையானதும் செழுமையிலும் செம்மை ஆனதும் ஆதி மொழிகளில் ஒன்றும்
ஆகிய எங்கள் தமிழ் மொழி. இத்தமிழ் மொழிக்கு பாண்டிய வம்ச ஆட்சியில் சமதாக்கியன்
திறனதூமாக்கினி என்ற மகா அறிஞர் இலக்கண விதிமுறைகளை எழுத்துருவில் தொகுத்து
வழங்கிய மாபெரும் காப்பியநூலே தொல்காப்பியம் ஆகும் . இவர் பழந்தமிழ் பெருங்குடி களில்
ஒன்றாகிய காப்பிய வழித் தோன்றலில் வந்தவர் என்று அறிய முடிகின்றது.

அக்காலத்தில் குரு குல கல்வி முறைப்படி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் முறை மிகவும்
பிரபல்யம் ஆனது . இவரின் கற்றல் தொகுதியில் ஆயிரம் மாணவர்கள் கொண்ட பெரும் பாசறை
ஆகும் . இவரின் பாசறையில் செய்முறை பாடத்தின் போது சூழ்நிலைகளுக்கு ஏற்ப தெளிவாக
கற்றுக் கொடுக்கும் ஆசானாக விளங்கினார். இவரின் கற்பித்தல் முறையில் ஒரு விளக்கமாக கீழே
குறிப்பிடுகின்றேன்.

ஒரு பெரிய மண்பானையில் மாணவர்கள் அனைவரும் பார்க்கும்படி முன் வைத்தார் . இந்தப்
பானைக்குள் என்ன இருக்கின்றது என்று மாணவர்களை பார்த்து வினாவினார். பல
நிமிடங்களுக்குப் பின் ஒரு மாணவன் எழுந்து அதற்குள் காற்று உள்ளது என்று பதில் அளித்தார் .
சரியான பதில் என உரைத்த ஆசிரியர் பின்னர் அதனை எப்படி வெளியேற்ற முடியும் என்று
அடுத்த வினாவைத் தொடுத்தார் அதற்கு மாணவர் நீரினை பானையில் நிரப்பும்போது காற்று
வெளியேறும் என்று பதிலுரைத்தார். சரியான பதில் என்று கூறிய ஆசிரியர் இதிலிருந்து நாம் ஒரு
மெய்யியல் உண்மையை புரிந்துகொள்ள முடியும் என்று விளக்கினார்.

அது என்னவெனில் எங்கள் மனங்களை நல்ல எண்ணங்களினால் நிறைத்துக் கொள்ளும்போது தீய
எண்ணங்கள் அங்கு புக இடமில்லை என்பதே. எனவே நாங்கள் எப்பொழுதும் நல்லதையே
சிந்திப்போம் .தெளிவான எண்ணங்களால் நிரப்புவோம் .

நாம் என்னத்தைத்தான் சொன்னாலும் எழுதினாலும் அதன்படி நமது வாழ்வை வாழ்வது மிகவும்
கடினமானதுதான் ஆனால் எமது புறச்சூழல்கள் மூலம் தெளிவுற வகுக்கும்போது நன் முறைகளை
கடைப் பிடிக்கும் போதும் அவைகளை நல்ல கருத்துக்களாக மாற்றியமைக்க முடியும்.
அவற்றிற்காக ஐந்து முறைகளை நான் தெரிவு செய்துள்ளேன்.
முதலாவதாக தவறுகளை உணர்ந்து ஏற்றுக் கொள்ளல் .
அதில் இருந்து கற்றுக்கொள்ளுதல் .
நடந்த தவறுகளை நடந்த தவறுகளிலிருந்து தெளிவுறல் . அதிலிருந்து வெளியேறுதல் .
அதை மீண்டும் செய்யாது நிதானமாக இருத்தல் .
பிறரைக் குறை கூறாமல் ஏதும் சாக்குப் போக்குச் சொல்லாமல் நல்ல நிலைகளில் நல்ல
சிந்தனைகளுடன் தொடர்ந்து இருப்போமாக .
உடலை வளர்ப்பது உணவு
உயிரை வளர்ப்பது மனது
மனங்களில் நல்ல எண்ணங்களை நிரப்பி விடுங்கள்
வாழ்வு நலம் சேரும்.

இதன் மூலம் நமது வாழ்வும் நலமுடனும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து பார்ப்போமே!!!
நன்றி.
மகேஸ்வரன்!!!